மு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது: நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      தமிழகம்
cm nellai 2019 10 18

மு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துவிட்டது என்று நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது.,

அம்மாவின் மரணம் பற்றி மு.க.ஸ்டாலின் தவறான செய்திகளை பரப்புகிறார். அவரை அம்மாவின் ஆத்மா சும்மா விடாது. நிச்சயம் பழிவாங்கும். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தற்போதைய நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். கனிமொழி 2 ஜி ஊழலில் சிக்கி 6 மாதம் டெல்லி திகார் சிறையில் இருந்தார். இப்படி அம்மாவுக்கு துரோகம் செய்தவர்களை எல்லாம் அம்மாவின் ஆத்மா பழிவாங்கும். மக்களிடம் தவறான பிரச்சாரத்தை பரப்பி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் ஸ்டாலின்.

உடல்நலக்குறைவால் கருணாநிதி வீட்டில் இருந்தபோது 2 வருடம் அவரை பார்க்க முடிந்ததா? வீட்டு சிறையில் அவரை வைத்திருந்தார்கள். இப்படி பெற்ற தகப்பனுக்கே வஞ்சகம் செய்தவர் ஸ்டாலின். ஒரு எம்.எல்.ஏ வெளியே போனாலும் ஆட்சி போய்விடும் என்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் கூட்டினார். நாங்களும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தோம். நான் தீர்மானத்தை வாசித்துக்கொண்டிருந்த போதே தி.மு.க.வினர் எழுந்து டான்ஸ் ஆடினார்கள். நாற்காலியை இழுத்து போட்டனர். சபாநாயகர் கையை பிடித்து இழுத்தனர். இப்படி ரவுடித்தனம் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு தாங்குமா?. நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே சென்று காட்டினார். அவருக்கு பதவி வெறி பிடித்துவிட்டது.

அ.தி.மு.க.வை உடைக்கப்பார்த்தார் முடியவில்லை. ஆட்சி போகும் என்று எதிர்பார்த்தார் அதுவும் முடியவில்லை. அ.தி.மு.கவில் ஒரு தொண்டனைக்கூட அசைக்கமுடியாது. நீங்கள் நல்லது செய்தால் தான் நல்லது நடக்கும். நீட் தேர்வு பற்றி தவறான தகவலை சொல்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான். ஆனால், நாங்கள் அதற்கு முழு விலக்கு பெற பாடுபட்டோம். எனவே பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் தி.மு.கவிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் முத்தமிழ் செல்வனுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார். இன்று மாலையுடன் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து