முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - விக்கிரவாண்டி 84.36 சதவீதம் - நாங்குநேரி 66.10 சதவீதம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் நேற்று நடந்த இடைத்தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீதமும், நாங்குநேரி தொகுதியிர் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதே போல் மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களிலும் நேற்று நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. முன்னதாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இரு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்த நிலையில் வெளியூர்க்காரர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். அதை தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சாகு பேட்டி

இந்த நிலையில் நேற்று இரவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்:- இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீதமும், நாங்குநேரியில் 66.10 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுடன் புதுச்சேரி மாநிலம் காமராஜர்நகர் தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சில இடங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்தினர். இதே போல் மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களிலும் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து