முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான அம்மா ஆம்புலன்ஸ் வாகன சேவை - முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மேலும் 22 கால்நடை அவசர மருத்துவ சிகிச்சைக்கான அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மூலம் பரிட்சார்த்த முறையில் காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு தலா 2 ஊர்திகள் வீதம் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளிடையே இச்சேவை நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 ஓட்டுநர்களுக்கு அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக் கூடிய வகையில் சக்திவாய்ந்த தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு தங்கு தடையின்றி கிடைத்திட இன்வர்டர் மற்றும் இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி கால்நடை பராமரிப்பு துறைப் பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்று வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் பக்கவாட்டு வெளிப்புறத்தில் துறைப்பணிகளை விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் அம்மா ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை ஊர்தி இயக்கப்படும். இந்த சேவை 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர். சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் காமராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஞானசேகரன், மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து