தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை! கருத்து கூற ரஜினிகாந்த் என்ன கட்சித் தலைவரா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi interview 2019 11 11

கோவை : தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. இந்த விஷயத்தில் கருத்துகூற ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகச் சொல்கிறார்களே?
பதில்:-  தமிழகத்தில், அ.தி.மு.க. வை பொறுத்தவரை வெற்றிடம் இல்லை என்பது இல்லை. நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிலும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
கேள்வி:- புகழேந்தி அ.தி.மு.க.வில் இணைவாரா? ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- அவர் கடிதம் கொடுத்தால் தலைமைக் கழக நிர்வாகிகள் பரிசீலித்து முடிவெடுப்பார்கள்.
கேள்வி:-  உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது?
பதில்:-  அதை மாநில தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு, குறித்த காலத்தில் அவர்கள் தேர்தலை அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி:-   உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கூட்டணி கட்சிகள் அதில் இடம் பெறுவார்களா?
பதில்:- அட்டகாசமாக இருக்கும். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.
கேள்வி:-  தொடர்ந்து ஆளுமைமிக்க தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருக்கின்றது என்று சொல்வது ஏன்?
பதில்:- யார் சொல்கிறார்?
கேள்வி:- ரஜினி சொல்கிறார்.
பதில்:- கருத்து கூற அவர் என்ன அரசியல் தலைவரா? கட்சி ஆரம்பித்திருக்கின்றாரா? அவர் ஒரு நடிகர். அரசியல் தலைவர்கள் எவரேனும் சொல்கின்றார்களா? சம்பந்தமில்லாதவர் சொன்னால் அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். ஏற்கனவே அதற்கான பதிலை பொதுக் கூட்டத்தில் நான் அழகாக தெரிவித்து விட்டேன். விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக நீங்கள் இதுபோன்ற கேள்வி கேட்பதினால், தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதனை பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பெரிதுபடுத்துகிறார்கள்.
கேள்வி:- காற்றில் மாசு கலந்துள்ளதாக சொல்கிறார்களே?
பதில்:- வருவாய்த் துறை அமைச்சர் அதற்கான பதிலை பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
கேள்வி:- மாமல்லபுரம் அழகுபடுத்தப்படுமா?
பதில்:- நிச்சயமாக அழகுபடுத்தப்படும். மாமல்லபுரம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிகச் சிறப்பாக, அழகாக, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து