முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய பவுலர்கள் - கேப்டன் கோலி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

இந்தூர் : இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை கபளகரம் செய்து வெற்றிக்கு வித்திட்டனர். அவர்களை வெகுவாக பாராட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். (தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பிட்டு) இவர்கள் பந்து வீசும் போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் அணிக்கு திரும்பும் போது, எதிரணியை மிரட்டும் கடினமான பந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது, பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது. வெற்றி குறித்து கேட்டால், இது மற்றொரு மெச்சத்தகுந்த செயல்பாடு ஆகும். 5 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கும் போது யாராவது ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் விளையாட வேண்டும். அந்த பணியை இந்த டெஸ்டில் மயங்க் அகர்வால் நிறைவு செய்தார். வெளிநாட்டு போட்டிகளிலும் இது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். டெஸ்டில் ஒரு இளம் வீரர் பேட்டிங் செய்ய வரும் போது, பெரிய சதங்கள் அடிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது தெரியும். சீனியர் வீரரான நான், சதத்திற்கு பிறகும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி பெரிய ஸ்கோர் குவிப்பது குறித்து இளம் வீரர்களுக்கு தெரிவிப்பது முக்கியமான ஒன்றாகும். இளம் வயதில் நான் செய்த தவறுகளை அவர்கள் செய்யாமல் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன். சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம். இந்திய அணிக்காக முதல்முறையாக பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க்) நடக்கும் இந்த டெஸ்ட் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து