முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தோல்வி பயத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்து வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:-  9 மாவட்டங்களுக்கு 4 மாதத்திற்குள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கை குறித்து...
பதில்:-  இது முழுக்க, முழுக்க மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நீங்கள் தேர்தல் ஆணையத்தைத்தான் கேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டவுடன்,  நாங்கள் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். இன்றையதினம் எங்கள் கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

கேள்வி:-  ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு அறிவிக்கவில்லை, இது வன்முறையை ஏற்படுத்துமென்றும்,  இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமென்றும், எதிர்க்கட்சித்தலைவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மக்களை சந்தித்து, வாக்குகளைக் கேட்டு, வெற்றி  பெறுவதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு, தோல்வி பயத்தில் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த நடைமுறையின்படி, அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து நிறுத்துகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கேள்வி:- ஏற்கனவே அறிவித்த தேர்தல் செல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்?
பதில்:- இதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, அரசு அல்ல, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.

கேள்வி:- இன்னும் வேட்பாளர் அறிவிக்காததன் காரணம் என்ன?
பதில்:- நீங்களே தேர்தல் அறிவிக்கவில்லை என்று சொல்லி விட்டீர்கள், தேர்தலை அறிவிக்காமல் எப்படி வேட்பாளரை அறிவிப்பார்கள். நீதிமன்ற உத்தரவு இப்பொழுது தான் வந்திருக்கிறது. இன்றைக்கு கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம், அதில் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிப்போம்.

கேள்வி:- தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
பதில்:- தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே வழக்கு தாக்கல் செய்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்பொழுதும் அந்த முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து, உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து