28 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      சினிமா
Lata Mangeshkar 2019 11 11

மும்பை : பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்(90) மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் இந்தி உள்பட 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்த நாளை லதா கொண்டாடினார். இந்நிலையில், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப்பை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் கடந்த 11-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல்நிலை சற்று தேறியது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் நேற்று டிஸ்சார்ஜாகி வீடு திரும்பினார். 28 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மகிழ்ச்சியை தனது டுவிட்டர் அபிமானிகளுடன் பகிர்ந்து கொண்ட லதா மங்கேஷ்கர், நான் நலம் பெற அருளிய தெய்வங்களுக்கும் பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உடல்நலம் தேறுவதற்கு இரவு, பகல் பாராது காவல் தேவதைகளாக இருந்து கண்காணித்து, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் தங்கையான பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே(83) சுமார் 12 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து