கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி - ஆட்சியை தக்க வைத்தார் எடியூரப்பா

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      இந்தியா
Yeddyurappa 2019 12 09

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில்  12 தொகுதிகளில் பா.ஜ.க.  வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆட்சியை தக்க வைத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.

குமாரசாமி முதல்வரானார்

கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105, காங்கிரஸ்-78, மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. முதல்வர் பதவியையும் விட்டுக் கொடுத்தது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதல்வரானார்.

ஆட்சி கவிழ்ந்தது

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்த இடையூறுகளால் குமாரசாமியால் நிம்மதியாக ஆட்சி நடத்த இயலவில்லை. இந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதோடு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது.

எடியூரப்பா முதல்வரானார்

இதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். பதவி விலகிய 17 பேரும் எடியூரப்பாவுக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக 11 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.15 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணிக்கு முன்னிலை நில வரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றனர். அடுத்தடுத்து சுற்றுக்களின் போது பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகா மாநில பா.ஜ.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடினார்கள். ஓட்டு எண்ணிக்கை நடந்த 15 சட்டமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.

ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா

15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் மூன்று கட்சிகளும் 15 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. இதன் காரணமாக 15 தொகுதிகளிலும் மிக, மிக கடுமையான மும்முனைப் போட்டி இருந்தது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பி உள்ளது.

மெஜாரிட்டிக்கு 113 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எடியூரப்பாவுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகச் சிறந்த தீர்ப்பை வழங்கியதற்காக மகிழ்ச்சி அடைவதாக எடியூரப்பா கூறி உள்ளார். இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல், மக்கள் சார்பு மற்றும் நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து