தமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை - வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      தமிழகம்
chennai high court 2019 05 01

சென்னை : மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் தொடர்ந்த வழக்கையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. மறைமுக தேர்தலின் படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க மாட்டார்கள். மாறாக வார்டு கவுன்சிலர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அவசர சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனர். மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு சுயேட்சை வேட்பாளர் போட்டியிட முடியாது என்பதால் இந்த அவசர சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது,

குறிப்பிட்ட பதவிக்கு தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு நபர் கோருவது சட்டப்படியான உரிமைதானே தவிர, அது அரசியலமைப்பு ச்டடம் வழங்கிய அடிப்படை உரிமைகள் இல்லை. நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது. எனவே திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தடையில்லை என்று ஐகோர்ட் தெரிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து