ஐ.ஐ.டி. மாணவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைக்கலாம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      தமிழகம்
chennai high court 2019 05 01

சென்னை : ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா உயிரிழந்த வழக்கை தமிழக அரசு விரும்பினால் சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே 2006 முதல் தற்போது வரை சென்னை ஐ.ஐ.டி.யில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த சலீ்ம் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.  ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா வழக்கை, தமிழக அரசு விரும்பினால் சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்றும், ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து