உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் - இதுவரை 1.09 லட்சம் பேர் மனுத் தாக்கல்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      தமிழகம்
tn local election 2019 12 14

சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 9-ம் தேதி ஆரம்பித்து நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் முறையாக நடந்தது. 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் முறையாக மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்த பின்னர் அறிவிக்கப்பட வேண்டும் என தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி , நகராட்சிகளுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. நீதிமன்றம் சென்றது. அதில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்த புது அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்படி டிச.27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் எனவும், கடந்த 9-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் டிச.19-ம் தேதி ஆகும்.தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் ஆர்வத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் (13/12/2019) வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் கிராம, ஊராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு 75,170 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 26,245 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7659 பேரும், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 704 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மொத்தமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். டிச.27, 30 தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து