முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் பாதுகாப்பு - சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக திறமையில் தமிழக அரசு முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் குறை தீர்க்கும் துறை அளித்த அறிக்கையில் ஒட்டுமொத்த நிர்வாக நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், மாநிலங்களின் செயல்திறன்கள், வேளாண்மை மற்றும் துணை தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளர்ச்சி, நீதி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையமாக கொண்ட நிர்வாகம் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை, பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாகப் பிரித்து செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 17 அமைச்சகங்கள் / துறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் கீழ்க்காணும் தர வரிசைப் பட்டியல் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் குறை தீர்க்கும் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு 5.62 மதிப்பெண் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

குடிநீர் வசதி, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வெளியிடங்களில் மலம் கழித்தல் இல்லாமை, புறநகர்ப் பகுதிகளை அணுகுவதற்கான வசதி, சுத்தமான சமையல் எரிவாயு, தங்குதடையில்லா மின் விநியோகம், தனிநபர் மின் பயன்பாட்டின் வளர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளில் தமிழ்நாடு 0.74 மதிப்பெண் பெற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

குற்ற நிரூபண விகிதம், காவலர்கள் எண்ணிக்கை மகளிர் காவலர்களின் விகிதாச்சாரம், நீதிமன்றம் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளில் தீர்வு ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில், தமிழ்நாடு 0.56 மதிப்பெண் பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.

குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதம், மொத்தக் கருவுறுதல் விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் இருப்பு மற்றும் 24X7 நேரமும் இயங்கும் வசதி ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பொது சுகாதார மேம்பாட்டில் தமிழ்நாடு 0.78 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 2-ஆம் இடத்தில் உள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு மாநில அளவிலான செயல் திட்டம், வன எல்லை மாற்றம் ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சுற்றுச்சூழலில், தமிழ்நாடு 0.58 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 3-வது இடத்தில் உள்ளது. கல்வித் தரம், பாலின சமநிலைக் குறியீடு, தொடக்க நிலையில் (ஒன்று முதல் எட்டாம் படித்தரம்) தக்கவைப்பு விகிதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சேர்க்கை விகிதம், திறன் பயிற்சி அளித்தல், வேலைவாய்ப்பு விகிதம் (சுயதொழிலில் ஈடுபடுவோர் உட்பட) ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் மனிதவள மேம்பாட்டில் தமிழ்நாடு 0.64 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 5-வது இடத்தில் உள்ளது.

தனிநபர் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி, மாநில உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான நிதி பற்றாக்குறை, மாநிலத்தின் சொந்த வரி வருவாயிலிருந்து மொத்த வரி வருவாய், மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக்கான நிதிச் சுமை ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பொருளாதார மேலாண்மையில் தமிழ்நாடு 0.58 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 5-வது இடத்தில் உள்ளது.

பிறப்பு பாலியல் விகிதம், மருத்துவக் காப்பீடு, ஊரக வேலைவாய்ப்பு உறுதி, வேலைவாய்ப்பின்மை விகிதம், அனைவருக்கும் வீடு, பெண்களின் பொருளாதார மேம்பாடு, ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான வழக்குகளில் நீதிமன்றங்களின் மூலம் தீர்வு ஆகியவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சமூக நலம் மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு 0.49 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 7-வது இடத்தில் உள்ளது.

வேளாண்மை மற்றும் துணைத் தொழில்கள், உணவு தானிய உற்பத்தி, தோட்டக்கலைத் துறை, பால் பொருட்கள் தயாரிப்பு, இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் மற்றும் பயிர்க் காப்பீடு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தமிழ்நாடு 0.45 மதிப்பெண் பெற்று இந்தியாவில் 9-வது இடத்தில் உள்ளது.

மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்களின் குறை தீர்க்கும் துறை அளித்த தரவரிசைப் பட்டியலில் மாநில வாரியாக பெற்றுள்ள தரவரிசை மதிப்பெண் விபரம் வருமாறு:-

1. தமிழ்நாடு 5.62
2. மகாராஷ்ட்ரா 5.40
3. கர்நாடகா 5.10
4. சத்தீஸ்கர் 5.05
5. ஆந்திரா 5.05
6. குஜராத் 5.04
7. அரியானா 5.0
8. கேரளா 4.98
9. மத்தியப்பிரதேசம் 4.85
10. மேற்கு வங்காளம் 4.84
11. தெலுங்கானா 4.83
12. ராஜஸ்தான் 4.08
13. பஞ்சாப் 4.57
14. ஒரிஸா 4.44
15. பீஹார் 4.40
16. கோவா 4.29
17. உத்திரப்பிரதேசம் 4.25
18. ஜார்கண்ட் 4.23

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து