Idhayam Matrimony

தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி இன்று வரை தொடரும் - தி.மு.க. புகாரில் உண்மையில்லை என தேர்தல் ஆணையர் பேட்டி

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணும் பணி நாளை (இன்று) வரை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் தெரிவித்தார்.

2 கட்ட தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5,090 ஒன்றிய கவுன்சிலர், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 2-ம் தேதி எண்ணப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,   

முறைகேடு இல்லை

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட மாட்டாது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறும் வரை இந்த பணிகள் தொடரும். வாக்கு எண்ணும் மையங்களில் 16,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 30,300 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தி.மு.க. புகாரில் உண்மையில்லை

வாக்கு எண்ணிக்கையில் எந்தவித முறைகேடும் இல்லை, முறையாகவே நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார். ஊரக உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து