முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

491 டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் எடப்பாடி வழங்கினார்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் நிலையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 491 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் 1,000 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அகற்றிட வேண்டுமென்ற சுப்ரீம்கோர்ட்டின் ஆணையின்படியும் 3,321 கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள், இயங்கிவரும் பிற மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூட்டத்தில், உபரியாக பணிபுரிந்து வரும் கடைப் பணியாளர்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களில் சிறப்புத் தேர்வு நடத்தியும், பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களிலும் நியமனம் செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களைக் கொண்டு சிறப்புத் தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்திட 18.8.2019 அன்று சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மண்டல மையங்களில் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு 491 இளநிலை உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 491 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். கிர்லோஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து