முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு வலியுறுத்தும் - சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் உறுதி

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை  : இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும் என்றும் தமிழக கவர்னர் சட்டசபையில் உறுதி அளித்தார்.

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று  சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினாரர். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் கூறியதாவது:-

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். தமிழ்நாடு அரசு எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால், பாக் வளைகுடாவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறைக்காவலில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, விரைவில் சுமூகத்தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஜெயலலிதா நினைவு மண்டபம்

மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும். காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல் திறம்பட நடத்தப்பட்டு உள்ளது. மக்களாட்சியை பரவலாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டப்பட்டதில் தமிழக அரசுக்கு முதலிடம் வழங்கபட்டு உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது. காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு இதுவரை ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து