யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெற மாட்டேன் - வங்க தேச கேப்டன் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      விளையாட்டு
bangladesh captain 2020 01 14

மோர்தசா : வங்காளதேச கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட மோர்தசா, யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மோர்தசா. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரை, வங்காளதேச அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இதனால் அணியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நான் நினைக்கும் போதுதான் ஓய்வு பெறுவேன். யார் வற்புறுத்தினாலும் அந்த முடிவுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மோர்தசா எதிர்காலம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், மோர்தசா எங்களிடம் போன் செய்து, வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினார்.அவருக்கு நாங்கள் பிரியாவிடை கொடுக்க விரும்பினோம். தற்போது அதில் அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாட விரும்புகிறார். அதற்கு அர்த்தம் உள்ளூர் கிரிக்கெட்டாக கூட இருக்கலாம். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது, டாக்காவில் உங்களுக்கு பிரியாவிடை போட்டி நடத்த விரும்புகிறோம் என்று கூறினேன். ஆனால், தற்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள அவரிடம் பேச வேண்டியுள்ளது என்றார்.

மோர்தசா தனது எதிர்காலம் குறித்து கூறுகையில்,  நான் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பது என்னுடைய சொந்த விஷயமாகும். நான் தேசிய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று எப்போது கூறினேன். என்னுடைய தேசிய ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. தற்போது நான் அதில் இல்லை. கிரிக்கெட் போர்டு என்னை கேப்டனாக வைத்திருக்குமா?. அணியில் சேர்க்குமா? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. தேர்வுக்குழு என்ன நினைக்கிறதோ அதை செய்யட்டும். கிரிக்கெட் போர்டு என்னை கேப்டன் பதவியில் இருந்து விலகச் சொன்றால், உடனடியாக அதை செய்வேன். என்னுடைய பிரியாவிடை போட்டி குறித்து நான் சிந்திக்க நேரம் இருக்கிறது. அதற்கான அவசியம் இருப்பதாக நினைக்கவில்லை. சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் போது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள். அது தேசிய அணியாக இருக்கலாம். அல்லது மற்ற இடங்களில் விளையாடும் போட்டியாக இருக்கலாம். வீரர்கள் தேசிய அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என நினைப்பதில்லை. நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அது டாக்கா லீக்காக இருக்கலாம். தற்போது தற்போது மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருக்கிறேன். நான் எங்கே விளையாட விரும்புகிறேன் என்ற முடிவை எடுக்க முழு சுதந்திரம் உள்ளது. யார் வற்புறுத்தினாலும் நான் ஓய்வு பெற மாட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து