டூவீலரில் குளித்துக்கொண்டே பயணம் வியட்நாமில் 2 வாலிபர்களுக்கு அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      உலகம்
two young men in Vietnam fined  2020 01 26

ஹனோய் : வியட்நாமில் வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு குளித்துக்கொண்டு போனது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மாகாணத்தில் 23 வயதான ஹூய்ன்தன் கான் என்ற வாலிபரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் மேலாடை அணிந்திருக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டனர். பின்னால் இருந்த நபர், வாளியில் இருந்து தண்ணீரை தன் மீது ஊற்றிக் கொண்டும், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மீது ஊற்றிக் கொண்டும் சென்றார். அவர்கள் தங்களுக்கு தாங்களே சோப்பும் போட்டுக் கொண்டனர். இப்படி அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறே குளித்துக்கொண்டு போனதை பார்த்த பலரும் செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பதிவிட்டனர். இது மின்னல் வேகத்தில் வைரலானது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு அவர்கள் குளித்துக் கொண்டு போனது வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. குளியல் வீடியோவை பார்த்த போலீசார், அதன் அடிப்படையிலும், மோட்டார் சைக்கிள் எண் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை வைத்தும் துப்பு துலக்கினர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஹூய்ன்தன் கான் போலீசார்வசம் சிக்கினார். போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவருக்கும், அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றவருக்கும் தலா 80 டாலர் (சுமார் ரூ.5,600) அபராதம் விதித்தனர். ஓட்டுனர் உரிமம் பெற்றிராத ஹூய்ன்தன்கானுக்கு, மோட்டார் சைக்கிளை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து