ஆடுகளத்துக்கு ஏற்றார்போல், பேட்டிங்கை மாற்றி விட்டேன் - இந்திய வீரர் கே.எல். ராகுல் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      விளையாட்டு
KL Rahul 2020 01 26

ஆக்லாந்து : ஆடுகளம் மாறிவிட்டதால், எனது பேட்டிங்கையும் மாற்றிக் கொண்டேன் என்று ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணி வீரர் கே.எல். ராகுல் தெரிவித்தார்
ஆக்லாந்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்தி்ய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக ஆடிய ராகுல் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமலிருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். முதல் போட்டியில் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியின் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில்,

ஆக்லாந்து ஆடுகளம் முதல் போட்டியில் இருந்ததைப் போல் இல்லை. சிறிது கடினமாகவும், பந்துகள் மெதுவாகவும் வந்தன.சூழலும் வித்தியாசம், இலக்கு வித்தியாசம், ஆடுகளமும் மாறிவி்ட்டதால் எனது ஆட்டத்தில் மாற்றத்தைச் செய்தேன். அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுப்புகள் வேறு அதிகரித்து விட்டன. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் விரைவாக ஆட்டமிழந்து விட்டதால், நான் நின்று விளையாட வேண்டிய நிலையில் இருந்து ஆட்டத்தை முடித்து வைத்தேன். ஆட்டத்தையும், சூழலையும் புரிந்து கொண்டு நான் விளையாடுவது எனக்கு சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு புரிந்து விளையாடுவது களத்தில் நான் நிலையான ஆட்டத்தை தருவதற்கு உதவும். எப்போதுமே அணியையும் தொடர்ந்து வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்று அணிக்கு என்ன தேவையோ அதை வழங்க முடியும். இவ்வாறு ராகுல் தெரிவித்தார். மூன்றாவது டி20 போட்டி ஹேமில்டன் நகரில் வரும் 29-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து