வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜராகி விளக்கம்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      சினிமா
kalpathi house 2020 02 12

‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவருக்கு பதில் அவரது ஆடிட்டர் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து