கொடைக்கானலில் குவிந்த காதல் ஜோடிகள்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Kodaikanal 2020 02 14

காதலர் தினத்தையொட்டி கொடைக்கானல் வந்த பெரும்பாலான காதல் ஜோடிகள் கைகளில் ரோஜா மலர்களை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர்.

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் காதலர்கள் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானலில் ஏராளமான இளம் ஜோடிகள் குவிந்தனர்.

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் எப்போதுமே காதலர் தினத்துக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். காதலர்கள் மட்டுமின்றி காதல் திருமணம் செய்தவர்களும் கொடைக்கானலுக்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து சில நாட்கள் தங்கி செல்வது வழக்கம். மேலும் புதிதாக திருமணம் செய்தவர்களும் தேனிலவுக்காக இதுபோன்ற இடங்களுக்கு வருகை தருவார்கள்.

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காதலர்கள் வந்துள்ளனர். காதலர்கள் மலர்கொத்துகள் கொடுத்தும், பரிசுப்பொருட்கள் அளித்தும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

பிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணாகுகை, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முக்கிய இடங்களில் நின்று செல்பி எடுத்து கொண்டனர். ஏரியில் படகுசவாரி செய்தும் மகிழ்ந்தனர். சில ஜோடிகள் குதிரை சவாரி செய்து சுற்றி பார்த்தனர். காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் ரோஜாமலர் மற்றும் பூங்கொத்து விற்பனை அமோகமாக நடந்தது.

காதலர் தினத்தில் தனது காதலிக்கு ரோஜா பூக்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் பழக்கம் உள்ளது. இதற்காக ஏற்கனவே ரோஜா பூக்களும், கொய் மலர்களும் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அதிகளவு பயிரிடப்பட்டிருந்த‌ன.  சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் பூக்கும் இந்த கொய்மலர்கள் அறுவடை செய்யப்பட்டு காதலர் தினத்தில் விற்பனை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டன.  இந்த மலர்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட‌து. கொடைக்கானலில் குளிர்பதன வசதி இல்லாத காரணத்தால், பெங்களூருக்கு அனுப்பப்படும் மலர்கள், அங்கு குளிரூட்டப்பட்ட அறைகளில் தரம் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் ரோஜா மலர்களின் விற்பனை அமோகமாக உள்ளதாக பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் வந்த பெரும்பாலான காதல் ஜோடிகள் கைகளில் ரோஜா மலர்களை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து