மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      இந்தியா
Kejriwal  Amit Shah 2020 02 19

டெல்லி முதல்மந்திரியாக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று சந்தித்தார்.   

டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. 

அதை எதிர்த்துபோட்டியிட்ட பா.ஜ.க 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. காங்கிரஸ் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை.
தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக டெல்லி முதல் மந்திரி பதவியை ஏற்றார். அவருடன் இணைந்து சக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதல்மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று   உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் இதில் அரசியல் தொடர்பான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து