ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      தமிழகம்
cm edapadi planted 2020 02 24

சென்னை : ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி சென்னை தலைமை செயலகம் எதிரில் மகிழம் மரக்கன்றினை நட்டு தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதியில் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும், கடந்த 2012-ம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும்,  2015-ம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும், 2016-ம் ஆண்டு 68 லட்சம் மரக்கன்றுகளும், 2017-ம் ஆண்டு 69 லட்சம் மரக்கன்றுகளும், 2018-ம் ஆண்டு 70 லட்சம் மரக்கன்றுகளும், 2019-ம் ஆண்டு 71 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டும் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும். இந்த மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளால் இணைத்து செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) முனைவர் துரைராசு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து