முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய சிறுமி பவதாரணிக்கு மாநில விருது - முதல்வர் எடப்பாடி வழங்கினார்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி,  பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய சிறுமி பவதாரணிக்கு  பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 25,000/- வைப்பீட்டு தொகைக்கான பத்திரங்களையும், இத்திட்டத்தில் இணைந்து தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயர்ந்த சேவையினை நினைவு கூரும் வகையில், அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக  அனுசரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19.2.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு வழங்கப்படும், இந்த ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது, போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண்தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டதற்காக, கடலூர் மாவட்டம், மாலுமியர்பேட்டையைச் சார்ந்த 9 வயது சிறுமி பவதாரணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாநில அரசின் விருதிற்கான  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி, பாராட்டினார். மேலும், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அக்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25,000/- வைப்பீட்டு தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து, தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு  முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை  முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் வி. சரோஜா,  அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து