வங்கதேச வீரரின் திருமணத்தில் செல்போன்கள் திருட்டால் மோதல்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      விளையாட்டு
SPORTS-4 2020 02 28

Source: provided

டாக்கா : வங்காள தேச கிரிக்கெட் வீரரான சவுமியா சர்க்காரின் திருமண விழாவின் போது, மோதல் ஏற்பட்டதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சவுமியா சர்கார் கடந்த புதன் கிழமை பிரியோந்தி தீப்நாத் பூஜா (19) என்ற பெண்ணை கரம் பிடித்து தன்னுடைய வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸ் தொடங்கினார். இவர்களின் திருமணம் அங்கிருக்கும் குலான கிளப்பில் நடைபெற்று உள்ளது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண நிகழ்ச்சியின்  போது, திடீரென்று திருமணத்திற்கு வந்திருந்த சிலரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. சுமார் 7 மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளது.

அதில் ஒன்று சவுமியா சர்க்காரின்  தந்தை செல்போன் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த நபர்கள் சிலர்  சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட, உடனே அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கி உள்ளனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருடு போன மொபைல் போன்களை மீட்டு கொடுத்துள்ளனர். அந்த நபர்கள் கைது செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை.

வங்காள தேசத்திற்காக சவுமியா சர்கார் 15 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 48  இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  மூன்று சர்வதேச சதங்களுடன் 3,000 ரன்களுக்கு மேல்  எடுத்துள்ளார். இதுவரை 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக 2014-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து