கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல நவீன கேப்சூல் படுக்கை: துபாய் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
Dubai Corona ambulance 2020 04 21

துபாய் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல நவீன கேப்சூல் படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் அமீரகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்படும் நபர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் மருத்துவ ஊழியர்கள் கவச உடைகளை அணிந்தபடி நோயாளிகளை பாதுகாப்பாக ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கேப்சூல் படுக்கைகள் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடி பெட்டி போன்ற அமைப்பின் உள்ளே கொரோனா பாதித்த நோயாளி படுக்க வைக்கப்படுவர். முழுவதும் மூடப்பட்டுள்ள அந்த பெட்டியின் உள்ளே நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்தவும் வசதி உள்ளது. மேலும் பல்வேறு திறப்புகள் போன்ற அமைப்புகளில் கையுறைகள் போன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ ஊழியர்கள் வெளியில் இருந்தபடியே நோயாளியை தொடாமல் பரிசோதனை மற்றும் உயிர்காக்கும் கருவிகளை அவருக்கு பொருத்த முடியும். எனவே கொரோனா தொற்று ஏற்பட்ட நபரை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் தகுந்த மருத்துவ பாதுகாப்புடன் அழைத்து செல்ல முடியும். இந்த கேப்சூல் படுக்கையுடன் ஸ்ட்ரெச்சர் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளதால் நோயாளியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து அப்படியே சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல முடியும். இதன் மூலம் கிருமி தொற்று வெளியில் பரவாமல் தடுப்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கு துரிதமாக சிகிச்சையும் அளிக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து