முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களை பிச்சைக்காரர்கள் போல் மத்திய அரசு நடத்துகிறது : சந்திரசேகர ராவ் கடும் தாக்கு

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டி உள்ளார்.  

தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார சிறப்பு திட்டங்கள், வெறும் ஏமாற்றுவேலை. துரோகம். சர்வாதிகார மனப்பான்மை. அது ஒரு குரூரமான திட்டம். நாங்கள் கேட்டது இது அல்ல. அவரது நோக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதா? அல்லது 20 லட்சம் கோடி என்ற எண்ணிக்கைக்கு கணக்கு காட்டுவதா? என்று சர்வதேச பத்திரிகைகளே விமர்சித்துள்ளன. இந்த திட்டத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கொரோனா பாதிப்பால் மாநில அரசுகள் நிதிதட்டுப்பாட்டில் இருக்கின்றன.

எனவே, மக்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. அதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கும் போது, மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் முறையா இது?நிதி பொறுப்புடைமை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின்கீழ் தெலுங்கானாவுக்கு 2 சதவீத உயர்வு (ரூ.20 ஆயிரம் கோடி) மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.அதற்கும் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் கேலிக்குரியதாகவும், கேவலமாகவும் இருக்கிறது.

மின்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்தினால், ரூ.2 ஆயிரத்து 500 கோடி தருவார்களாம். சந்தை குழுக்களில் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டால், மேலும் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளிப்பார்களாம்.இதுவா நிதி தொகுப்பு? இதை நிதி தொகுப்பு என்றே சொல்ல முடியாது. கூட்டாட்சி முறையில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையா இது? மாநிலங்கள் எதற்கு இருக்கின்றன? மாநில அரசுகளும் அரசியல் சட்டப்படி செயல்படுபவை.

மத்திய அரசுக்கு கீழ் இருப்பவை அல்ல. மாநிலங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறை, கூட்டாட்சி உணர்வுகளுக்கு எதிரானது. பிரதமர் மோடி, ஒத்துழைப்பான கூட்டாட்சி பற்றி பேசுகிறார். ஆனால், அது முற்றிலும் வெற்று முழக்கம் என்று நிரூபணமாகி விட்டது. மத்திய அரசு தனது கவுரவத்தை, தானே குறைத்துக் கொண்டது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து