முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இருந்து கப்பலில் சென்னை வந்த பூனை காப்பகத்தில் ஒப்படைப்பு

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சீனாவில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு கப்பலில் சென்னை வந்த பூனை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விரும்புபவர்கள் தத்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் வேகமாக பரவத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் அப்போது கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 17 - ந் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது. இதைப்பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளும், துறைமுக அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளையாட்டு பொம்மைகள் கொண்டு வரப்பட்ட கண்டெய்னரில் தான் பூனையை கூண்டில் அடைத்து யாரோ சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து பூனையை மீட்டு கால்நடை மருத்துவ மனையில் பரிசோதனை செய்தனர். இதன்பிறகு வண்டலூர் பூங்காவுக்கு அந்த பூனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. கடந்த 3 மாதங்களாக சீன பூனையை கூண்டிலேயே அடைத்து வைத்து பராமரித்து வந்தனர். சீனாவில் இருந்து வந்த பூனை என்பதால் அதற்கு அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வந்தன.அதற்கு தேவையான பால் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டது. கொரோனா பீதி காரணமாக பூனையை கூண்டிலேயே அடைத்து வைத்திருந்தனர். 

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு பூனை சென்னையில் உள்ள டிரஸ்ட் ஒன்றின் காப்பகத்தில்  ஒப்படைக்கப்பட்டது. பூனைகளை கடந்த 2005 - ம் ஆண்டில் இருந்து பாதுகாத்து வரும் இந்த அமைப்பு தற்போது சீன பூனையையும் பராமரித்து வருகிறது. இந்த பூனையை விடுவிப்பது தொடர்பாக கடந்த மாதம் மத்திய அரசு சார்பில் சென்னையில் உள்ள விலங்குகள் காப்பக துறைக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பூனைக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விலங்குகள் ஆர்வலரான மேனகா காந்தியும் பூனையை கூண்டில் இருந்து விடுவித்து பராமரிக்க வேண்டும் எனவும் ஆர்வம் காட்டி வந்தார்.

இதற்கிடையே புளூ கிராஸ் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சின்னி கிருஷ்ணா என்பவரும் பூனையை தனிமைப்படுத்தி வைக்கக் கூடாது. விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளுக்கு பிறகு சீன பூனை தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பூனையை விரும்புபவர்கள் தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சீனாவில் இருந்து வந்த பூனை என்பதால் அதை தத்தெடுப் பதில் பொதுமக்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து