முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

கால்பந்து போட்டியில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி இடம் பிடித்துள்ளார்.

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் பார்சிலோனா கிளப் அணியின் கேப்டனாக உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த லயோனல் மெஸ்சி இருந்து வருகிறார். இந்த தொடரில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பை எதிர்கொண்டது.

இதில் பார்சிலோனா அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (72 சதவீதம்) வலம் வந்தாலும் அந்த அணியால் வெற்றியை தனதாக்க முடியவில்லை. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பார்சிலோனா தரப்பில் 11-வது நிமிடத்தில் கார்னர் வாய்பை பயன்படுத்தி மெஸ்சி கோலை நோக்கி அடித்த பந்தை அட்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் டிகோ கோஸ்டா கவனக்குறைவாக தடுத்ததால் அது சுயகோலாக மாறியது. 50-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அட்லெடிகோ மாட்ரிட் அணியில் சால் நிகுஸ் 19-வது மற்றும் 62-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் கோல் போட்டார்.  கடந்த 3 ஆட்டங்களில் கோல் எதுவும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்த மெஸ்சி, இந்த ஆட்டத்தில் ஒரு கோல் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தத்தில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தனது பெயரை இணைத்து சாதனை படைத்தார். 33 வயதான மெஸ்சி 861 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் பார்சிலோனா அணிக்காக 630 கோலும் (723 ஆட்டம்), அர்ஜென்டினா அணிக்காக 70 கோலும் (138 ஆட்டம்) அடித்து இருக்கிறார். போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த இலக்கை (700 கோல்கள், 973 ஆட்டங்களில்) கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடந்து இருந்தார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இந்த இலக்கை தாண்டியவர்கள் ஆவார்கள்.

கால்பந்து போட்டிகளில் 700 மற்றும் அதற்கு அதிகமான கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்சி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ஜோசப் பிகான் (ஆஸ்திரியா), ரோமாரியோ (பிரேசில்), பீலே (பிரேசில்), பிரென்ச் புஸ்காஸ் (ஹங்கேரி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), ஜெரார்டு முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 6 இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து