முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி : ரஷ்யா அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி ரஷ்யா வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.

இதுபற்றி ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரபூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், டிரான்ஸ்லேஷனல் மெடிசன் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வடிம் டரசோவ் கூறுகையில், 

செச்சேனோவ் பர்ஸ் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மனிதர்கள் மீது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது.

இதன்மூலம் குணமடைந்தவர்களின் முதல் குழுவினர் வரும் 15-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். இரண்டாம் குழுவினர் 20-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ரஷ்யாவின் கமாலேய் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கடந்த ஜூன் 18-ம் தேதி கண்டுபிடித்தது.

இதைக் கொண்டு செச்சேனோவ் பல்கலைக் கழகம் பரிசோதனைகளை நடத்தியுள்ளது.  செச்சேனோவ் பல்கலைக் கழகத்தின் மெடிக்கல் பாராசிடோலஜி, ட்ரோபிகல் மற்றும் வெக்டார்-போர்ன் டிசீசஸ் பிரிவின் இயக்குநர் அலெக்சாண்டர் லுகாஷேவ் கூறுகையில், மனிதர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பு மருந்து பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பு மருந்துகளைப் போன்று பாதுகாப்பான அம்சங்களை புதிய தடுப்பு மருந்தும் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு மருந்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம் இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். உரிய விதிமுறைகளின்படி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.  இந்த மருந்தின் பெயர் மற்றும் விற்பனைக்கு வரும் தேதி ஆகியவை பற்றி தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து