முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதலிடம்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் வழக்கம் போல; மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் (5.39 சதவீதம் அதிகம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். 2,120 மேல்நிலைப் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீதம் எடுத்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் -2 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.  தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொண்டனர்.  பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717ஆகும்.  பள்ளி மாணவர்களாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 ஆகும். இதில் மாணவிகள் 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 ஆகும். தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415 ஆகும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 94.80 சதவீதம், மாணவர்கள் 89.41 சதவீத பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. இம்மாவட்டத்தில் 97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். 96.99 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு 2-வது இடம் பிடித்துள்ளது. 96.39 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை கோவை பிடித்துள்ளது.

மாற்று திறனாளி மாணவர்களில் 2835 பேர் தேர்வினை எழுதினர். இதில் 2506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62 கைதிகள் தேர்வு எழுதியதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர்.  இயற்பியல் - 95.94 சதவீதம், வேதியியல் - 95.82 சதவீதம், உயிரியல் - 96.14 சதவீதம், கணிதம் -  96.31 சதவீதம், தாவரவியல் - 93.95 சதவீதம், விலங்கியல் - 92.97 சதவீதம், கம்ப்யூட்டர் அறிவியல் - 99.51 சதவீதம், வணிகவியல் -  95.65 சதவீதம், கணக்குப் பதிவியல் - 94.80 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 85.94 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 98.70 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 92.72 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 94.81 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 83.91 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் மாதம் 24-ம் தேதி நடந்த தேர்வுகளில் மட்டும் 36 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு வரும் 27-ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் (புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம்) ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு மட்டும், மறுதேர்வு முடிவடைந்த பின், தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி–தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.  அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.  பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  தரவரிசை முறையானது மாணவர்கள் மனஅழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காக ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்-1 வகுப்பு) மார்ச்  - ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை (அரியர்ஸ்) மார்ச் 2020 பருவத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நேற்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து