அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூலை 2020      சினிமா
Ajithkumar 2020 07 19

Source: provided

சென்னை : நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவர் குறித்த திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர். 

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.  உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர். அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார்.

வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார். போலீசாரை முககவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய செய்தார். போலீசார் சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

அதேபோல் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். ஆனால் அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. 

போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து