சென்னை : கந்தசஷ்டி கவசம் குறித்து கேவலமாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும் என்று நடிகர் ரஜினி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கருப்பர் கூட்டம் என்ற யு டியூப் சேனலில், இந்துக்கள் மனம் புண்படும்படி, அவர்கள் வழிபடும் கடவுள்களை இழிவுபடுத்தி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்தசஷ்டி கவசத்தை, கேவலமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டும் இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த யு டியூப் சேனல் நிர்வாகிகளான சென்னை, போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று டுவிட்டரில் நடிகர் ரஜினி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புன்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என்று அதில் தெரிவித்துள்ளார்.