முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 67.90 கோடி இழப்பீடு நீதிமன்றத்தில் டெபாசிட்: ஜெயலலிதா நினைவு இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு?

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017–ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு மீதான விசாரணையில் நேற்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. 

முன்னதாக, ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் தொடர்பான வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்ததுடன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் அதனை மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருந்தது. 

இதனிடையே வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.

24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு செலுத்தி உள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ. 36.9 கோடியை செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து