முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையான நேற்று தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.  அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டது. 

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் கடந்த 2-ம் தேதியுடன் 7 முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நேற்று 8-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 

இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும், போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது.  193 இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

நகரின் பிரதான சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து, வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீறி வெளியே சென்றால், வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முழு ஊரடங்கையொட்டி மதுரையில் உள்ள முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. 

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு  எண்ணிக்கை 285ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் நகரின் முக்கிய பகுதிகளான நெல்லை டவுண், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்கள் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து