பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Bhavani Sagar Dam 2020 08 01

Source: provided

ஈரோடு : தொடர்ந்து 3 ஆண்டுகளாக பவானி சாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி சாதனை படைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகள் உள்ளன. 

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரும் பவானிசாகர் அணைக்கு வரும். பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி நகராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்கிறது.

செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை பவானி சாகர் அணையில் 102 அடி தான் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அதற்கு மேல் தேக்கி வைக்கக் கூடாது.  அதன் பின்னர் நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து அணையில் 105 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது அரசின் விதி. ஏனென்றால் செப்டம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிக்கும்.

அப்போது அணையின் பாதுகாப்பு மற்றும் பவானி ஆற்று கரையோர மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.  தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை தாண்டி உள்ளது. கடந்த ஞாயிறன்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 604 கன அடி தண்ணீர் வந்தது. 

அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.45 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் வினாடிக்கு 700 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும் என மொத்தம் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 795 அடியாக அதிகரித்தது.

இதனால் அணையில் நீர்மட்டம் 100.48 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை பவானிசாகர் அணைப்பிரிவு உதவி பொறியாளர் சிங்காரவடிவேலு தலைமையில் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து