முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை வழங்க வேண்டும்: கொரோனா தடுப்பு நிதியை ரூ. 3000 கோடியாக உயர்த்தி வழங்குங்கள்: பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு நவம்பர் மாதம் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஆக.11) பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களுக்கு நன்றி. கொரோனா பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவற்றை பலப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் கூறி வருகிறேன். இதுதொடர்பாக கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பொருளாதாரத்தை சீர்படுத்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறோம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு சார்பாக 61 மற்றும் தனியார் சார்பாக 69 என மொத்தம் 130 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பரிசோதனைகளுக்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு ரூ. 5 கோடி. இந்த செலவில் 50 சதவீதத்தை பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்நாள் வரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 2,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைவான இறப்பு விகிதத்தைத் தமிழ்நாடு கடைபிடித்து வருகிறது. இறப்பு விகிதம் 1.6 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவில் உள்ளது.

இந்நாள் வரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 80.8 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவ ஆலோசனையின்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்படுகின்றன. கோவிட் மருத்துவமனைகள், கோவிட் ஹெல்த் மையங்கள், கோவிட் கேர் மையங்களில் உள்ள படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

இதில், கோவிட் மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 576 படுக்கைகளும், கோவிட் ஹெல்த் மையங்களில் 22 ஆயிரத்து 873 படுக்கைகளும் கோவிட் கேர் மையங்களில் 72 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 630 வென்டிலேட்டர்களுடன் மொத்தமாக 4,147 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன. 

பி.எம். கேர்ஸ் நிதி மூலமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குகின்றன. உடல்நிலை மோசமாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உதவி அதிகம் தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, அதிகளவில் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மற்ற உபகரணங்களை கொள்முதல் செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பட்ஜெட்டிலிருந்து போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு முகக்கவசங்களுக்காக ரூ.5.25 கோடி, என்-95 முகக்கவசங்களுக்காக 48.05 லட்சம், பி.பி.இ. பாதுகாப்பு உடைகளுக்காக 41.3 லட்சம், ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை கிட்டுகளுக்காக 43.26 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அவசர நிலையை கையாள 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள், 1,058 லேப் டெக்னீஷியன்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,751 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 2,000 பாரா மெடிக்கல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி வீடுதோறும் கண்காணிப்பு செய்து வருகிறது. தினந்தோறும் 550 காய்ச்சல் மையங்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 33 ஆயிரம் காய்ச்சல் மையங்கள் மூலம் 17 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 34 நிரந்தர மற்றும் 10 நடமாடும் மாதிரிகளை சேகரிக்கும் மையங்களை அமைத்துள்ளோம். இதுவரை 8 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஆயிரம் களப்பணியாளர்கள், 93 என்.ஜி.ஓ.க்கள், 2,700 தன்னார்வலர்கள் மூலம் அறிகுறியுள்ள தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும்,

எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 6 அமைச்சர்களையும் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நியமித்துள்ளேன். இதனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதே நடவடிக்கைகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மேற்கொள்கிறோம்.

47 லட்சம் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு மறுபடியும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை விநியோகித்துள்ளோம். அதன் பயன்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மேலும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 4.5 கோடி முகக்கவசங்களை விநியோகிக்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது. 

இலவச அரிசி மற்றும் முழு கொண்டலைக் கடலையை இலவசமாக வழங்குவதற்கு கால அளவை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு மக்களின் உணவு முறையில் முழு கொண்டைக் கடலை பிரதானமான உணவுப்பொருளாக இல்லை. எனவே, தமிழகத்திற்கு நவம்பர் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும். 

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு முழு செலவை ஏற்றுக் கொண்டு 3.77 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களை 253 ரயில்களில் அனுப்பி வைத்துள்ளது.

இதுநாள் வரை 60 ஆயிரத்து 875 பயணிகள் வந்தே பாரத் மற்றும் சமுத்ரா சேது மிஷன் திட்டங்கள் மூலமும், தனியார் விமானங்கள் மூலமும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கருவிகள் மற்றும் மருந்துகளை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நான் சிறப்பு ஊக்க தொகுப்பினை அறிவித்துள்ளேன்.

தற்போது வரை 50 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் வேளாண் தொழில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில், மாநிலத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைத்துள்ளேன். அவசர உத்தரவாத கடன் வரி உள்ளிட்ட திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக அறிவித்ததற்கு நன்றி. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதிகப்படியான கடன் வழங்க வலியுறுத்தியுள்ளேன்.

இதுவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5,329 கோடி ரூபாய் அளவில் கடன்கள் வழங்கியுள்ளோம். மேலும் பிரதமரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 512.64 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளோம். எனது முந்தைய வேண்டுகோளின்படி தமிழகத்திற்கான இந்த தொகுப்பை 3,000 கோடி ரூபாய் வரை உயர்த்த கோருகிறேன்.

மத்திய மற்றும் மாநில வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீடுகளுக்குக் குறைவாக இருக்கும். பற்றாக்குறையை ஈடுசெய்ய, கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் சிறப்பு மானியம் ஒதுக்கக் கோருகிறேன். 

ஏப்ரல்-ஜூன், 2020-க்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும்.  தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய் மானியம் கோருகிறேன். 

இந்த நேரத்தில் 1,321 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள சி.எம்.ஆர். மானியத்தை வெளியிடுவது, நெல் கொள்முதல் செய்ய உதவும்.  மின் துறையில் உடனடி சுமையை குறைக்க நிவாரணத் தொகுப்பை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

கோவிட் சூழ்நிலையில், பல்வேறு வெளிப்புற நிதி நிறுவனங்களுக்காக எனது அரசு இந்திய அரசுக்கு பல வெளிப்புற உதவித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட இந்திய அரசு நிறுவனங்களின் ஆரம்ப ஒப்புதல் விரைவான விநியோகத்தை செயல்படுத்த உதவும், இது பரந்த பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு பங்களிக்கும். 

ரிசர்வ் வங்கியின் சிறப்புத் தொகுப்புகளில் இருந்து தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழக நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் மறுநிதியளிப்பு வசதியாக வழங்குமாறு எஸ்.ஐ.டி.பி.ஐ.க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை புதுப்பிக்க உதவும்.  சுய உதவிக் குழுக்களுக்கான கோவிட் -19 க்கான சிறப்பு கடன் தயாரிப்பு அனைத்து வங்கிகளாலும் ஒரு குழுவுக்குக் குறைந்தது 2 லட்சம் ரூபாய்க்கு மேம்பட்ட கடன் தொகையும், மேம்பட்ட வட்டி அடக்கமும் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும். 

மேம்பட்ட முன்பண வட்டி ஒழிப்புக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் வகை -1 இல் கொண்டு வர வேண்டும்  சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு உத்தரவாதத்துடன் மேம்படுத்தப்பட்ட மொத்த கடன்களின் சி.ஜி.எப்.எம்.யூ. திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்,

மேலும் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து நிலை கூட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து