முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வம் உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களம் இறங்கியுள்ளன. அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை தாங்கள் உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது.  இந்த தடுப்பூசி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 20 நாடுகளில் இருந்து 100 கோடி தடுப்பூசி ‘டோஸ்’ ஆர்டர் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி உருவாக்கம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து, அறிவியல் உலகில் நிலவுகிறது.  இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம், செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:-

ரஷ்ய கூட்டமைப்பின், தேசிய மருந்துகள் பதிவு அமைப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிந்துள்ளது.  இது தொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்.  கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றங்களையும் உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. உலக அளவில் கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி தொடர்பான முயற்சிகளை வழிநடத்துவதிலும், விரைவுபடுத்துவதிலும் உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  தடுப்பூசி ஆராய்ச்சியை விரைவுபடுத்துவது, வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட செயல்முறைகளை பின்பற்றி, கடைசியில் உற்பத்திக்கு செல்லும் எந்த ஒரு தடுப்பூசியும் பாதுகாப்பானதாக, பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பயனுள்ள தொற்றுநோய் தடுப்பூசி, உலகளாவிய பொது நன்மையாக இருக்கும். மேலும், உலகமெங்கும் இது போன்ற ஒவ்வொரு தடுப்பூசியும் விரைவானதாகவும், நியாயமானதாகவும், எல்லோரும் நாடுவதற்கு சம வாய்ப்பினை தருவதாகவும் அமைய வேண்டும்.  இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து