முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை ஆணையாளர் விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார். 

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

முதல்வர் எடப்பாடியார் பல்வேறு சீரிய திட்டங்களை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த அம்மா  மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வாழும் மக்களுக்கு, ரூ.1020 கோடி செலவில், முல்லை பெரியார் அணையிலிருந்து நேரடியாக பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து, சுமார் 60 ஆண்டுகள் குடிநீர் பிரச்சனையே ஏற்படாவண்ணம் வசதி செய்து தர பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அனைத்து வார்டுகளுக்கும் சாலை வசதி, டுநுனு மின்விளக்கு, சுகாதாரம், தூய்மை பணிகள் மற்றும் பல ஆயிரம் கோடி செலவில் உயர்மட்ட பாலங்கள் ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசால் விலையில்லா மடிக்கணினி, இடைநிற்றல் உதவித்தொகை,16 வகையான உபகரணங்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

12-ம் வகுப்பில் மாணவ, மாணவிகள் அதிக தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்பு போன்ற உயர்தர படிப்புகள் சேர்வதற்கு ஏதுவாகவும், போட்டி தேர்வுகள் எதிர் கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதில் மதுரை மாநகராட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசு மாநில அரசு  பங்களிப்புடன் பல்வேறு வளர்ச்சி பணிகள், வேறு எந்த அரசும் குறிப்பாக தி.மு.க. அரசு இதுவரை அக்கரை எடுத்துக்கொள்ளாத நிலையில், சாமானிய மக்களின் முதல்வர் எடப்பாடியாரின் அரசு மதுரை மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பின்வரும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாட்டுத்தாவணி பழச்சந்தையினை மாற்றியமைக்கும் பணி ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தினை மேம்படுத்தும் பணி ரூ.162 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.

வரும் மார்ச் 2021 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புராதன சின்னங்களை புனரமைக்கும் பணி ரூ.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 2020க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பல்லடுக்கு வாகன நிறுத்தம் கட்டுமானப் பணி ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 2020 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணி ரூ.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் மார்ச் 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்படுள்ளது. நான்கு மாசி வீதிகளில் சிறப்பு சாலை அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.

வரும் மார்ச் 2021- க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்படுள்ளது. தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் அமைக்கும் பணி ரூ.46 கோடியில் நடைபெற்று வருகின்றது.

வரும் மார்ச் 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைகை வடகரை புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பு ஏற்படுத்தும் பணி ரூ.291 கோடி மதிப்பீட்டில், வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

வரும் மே2022 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீரான குடிநீர் வழங்கும் பணி ரூ.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் பிப்ரவரி 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பல்லடுக்கு வாகன நிறுத்தமானது. மீனாட்சியம்மன் கோவில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மார்கெட் பகுதியில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல்லடுக்கு வாகன (110 எண்ணம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 எண்ணம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில்) நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், புராதன சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையம் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணி வரும் அக்டோபர் 2020க்குள் பணி முடிக்கபட்டு வாகனங்கள் நிறுத்துவதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இப்பணிகள் தரத்துடன் உரிய காலத்தில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட்தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து