முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2 கோடியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு இணையதளம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட  (https://www.tnskill.tn.gov.in )இணையதளத்தை துவக்கி வைத்தார். 

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுவதுடன் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகிய திறன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்திடும் நோக்கில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழகத்தின் இணையதளம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்மொழி திறனாய்வு மற்றும் மின்-ஆளுமை தளமாக (Multilingual Integrated Skill Analytics and E-governance System) மேம்படுத்தப்பட்டுள்ளது. அம்மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் https://www.tnskill.tn.gov.in இணையதளத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். 

இதன்மூலம், பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், மதிப்பீட்டு முகமைகளின் பதிவுகள், பயிற்சி தொடர்பான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், பயிற்சி பெற்றவர்களது பணி அமர்த்தல் கண்காணிப்பு, இணையவழி பணப்பயன்  ஒப்பளிப்பு போன்ற பணிகளை இவ்விணையத்தின் வாயிலாக மேற்கொள்ள இயலும். அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை (Unified Single Skill Registry) உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை II-ன் ஒரு பகுதியாக,  20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிட, தமிழக முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும்,  தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  கோர்ஸெரா (Coursera) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும்.

இந்நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள்  மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல்,  மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடும் வகையில், தமிழக முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள்  இந்நிறுவனம் வழங்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளால் வேலைவாய்ப்பு பெற வழிவகை ஏற்படும்.  

கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதுடில்லியில் நடைபெற்ற 55-வது அகில இந்திய திறன் போட்டிகளில், கைவினைஞர் பயிற்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் சுழற்கேடயத்தை, தமிழக முதல்வரிடம் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.  

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் திறன்மிகு பணியாளர்களை உருவாக்கிடும் வகையில் சிறப்பாக பயிற்றுவிக்கும் பயிற்றுநர்களுக்கு புதிதாக இந்த ஆண்டு முதல் கௌசலாச்சாரியா விருது வழங்கப்படும் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த ஆண்டு, சிறப்பாக பயிற்றுவித்தமைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்பத்தூர் - அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சுகுமாருக்கு பொறியியல் அல்லாத பிரிவில் மாநில மற்றும் தேசிய அளவிலான கௌசலாச்சாரியா விருதும், மதுரை – அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் செவ்வேலுக்கு பொறியியல் பிரிவில் மாநில அளவிலான  கௌசலாச்சாரியா விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. தமிழக முதல்வரை சுகுமார் மற்றும் செவ்வேல் ஆகியோர் சந்தித்து, கௌசலாச்சாரியா விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன்,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து