கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: மேலும் 6 மாநில முதல்வர்களும் காணொலியில் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
Modi-Edappadi 2020 09 22

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களும், மாநில சுகாதார அமைச்சர்களும் பங்கேற்கும் உயர்மட்ட மெய்நிகர் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கோவிட் தொற்று நிலைமையை சமாளிப்பதற்கான நிர்வாக மற்றும் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார். 

மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் பங்கேற்க உள்ளன.  

நமது நாட்டில் கொரோனா தொற்றுக்காக மருத்துவச் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளில் 63 சதவீதத்தினர் இந்த ஏழு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளில் 65.5 சதவீதத்தினர் இங்கு உள்ளனர். மற்றும் மொத்த இறப்புகளில் 77 சதவீதம் இந்த 7 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஏற்படுகின்றன.  மற்ற ஐந்து மாநிலங்களுடன், பஞ்சாப் மற்றும் டெல்லியில் சமீபத்தில் தொற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டெல்லியில், நோயாளி - இறப்பு விகிதத்தை விட (கேஸ் பெடலிட்டி ரேட்) 2.0 சதவீதம் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் தவிர, பிற மாநிலங்களில் தொற்று உறுதி விகிதம் தேசிய சராசரியான 8.52 சதவீதத்தை  விட அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, திறம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவளிக்கிறது.

புதுடெல்லியின் எய்ம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேற்கொண்ட இ-ஐ.சி.யு தொலைபேசி ஆலோசனை பயிற்சியின் மூலம் ஐ.சி.யு.க்களை நிர்வகிக்கும் மருத்துவர்களின் மருத்துவ மேலாண்மை திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.   

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மேற்கொள்ளப்பட்ட உயர் மட்ட மதிப்பாய்வானது, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைப்பதையும், கொரோனா சுகாதார வசதிகளையும் உறுதி செய்தது.

கொரோனா தொற்று கட்டுப்பாடு, கண்காணிப்பு, சோதனை மற்றும் திறமையான மருத்துவ மேலாண்மை போன்ற விஷயங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதற்கும், நிலைமையை சமாளிப்பதற்கும், மத்திய அரசு பல்திறன் குழுக்களை அனுப்பி வருகின்றது.

இந்தக் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்து, உரிய நேரத்தில் சவால்களைக் கண்டறிந்து சமாளிக்க உதவுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து