எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தென்னிந்திய இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் கொடி கட்டி பறந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று நம்மிடையே இல்லை. இருந்தாலும் அவரது இனிமையான வசீகரிக்கும் குரல் மூலம் அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றால் அது மிகையாகாது. பொதுவாக இசை உலகில் கர்நாடக சங்கீதம் பயின்றவர்களே வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு உண்டு. ஆனால் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாமல் இசை உலகை ஆண்டவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மகத்தான சாதனை புரிந்தவர் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இவர் பாடாத மொழிகளே இல்லை. திரை இசை திலகம் கே.வி. மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ், தேவா என பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசைக்கு மெருகூட்டி பாடியவர் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, பாடலில் சிரிப்பை புகுத்தி ஒரு புதிய சாதனையை படைத்தவர் எஸ்.பி.பி. அதாவது சிரித்துக் கொண்டே பாடுவதில் இவர் அசகாய சூரர். அதே போல் சோகப் பாடல்களை பாடியும் ரசிகர்களின் இதயத்தை வருடியவர் எஸ்.பி.பி. கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளை 6 முறை பெற்றவர் இவர். ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறை பெற்றுள்ளார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை பாடியவர் எஸ்.பி.பி. கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். தமிழில் இவர் சாந்தி நிலையம் படத்தில் நடிகர் ஜெமினி கணேசனுக்காக இயற்கை எனும் இளைய கன்னி என்ற அற்புதமான பாடலை இசைக்குயில் சுசீலாவுடன் சேர்ந்து பாடினார். அந்த பாடல் அப்போது பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் அதே சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடி எம்.ஜி.ஆர். ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார். நேற்று இன்று நாளை படத்தில் பாடும் போது நான் தென்றல் காற்று, பருவ மங்கையோ தென்னங்கீற்று என்ற பாடலை மிக அற்புதமாக பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதே போல் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் என்று எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய பாடல் இன்று கேட்டாலும் நமது உள்ளத்தை தொடும். அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக சுமதி என் சுந்தரி படத்தில் பொட்டு வைத்த முகமோ, கட்டி வைத்த குழலோ என்ற பாடலை மிக ரம்மியமாக பாடிய சிவாஜி ரசிகர்களின் உள்ளங்களை கட்டிப் போட்டவர் எஸ்.பி.பி. கவரிமான் படத்தில் பூப்போலே உன் புன்னகையில் என்ற பாடலையும், கவுரவம் படத்தில் யமுனா நதி இங்கே, ராதை முகம் எங்கே என்ற பாடலையும் மிக அற்புதமாக பாடியிருப்பார் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமலுக்காகவும் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை. ரஜினிக்காக தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் என்ற பாடலை பாடி ரசிகர்களை அசத்தியவர் எஸ்.பி.பி. தில்லுமுல்லு படத்தில் ராகங்கள் பதினாறு என்ற பாடலையும் ரஜினிக்காக பாடினார். கமலுக்காக இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்ற பாடலையும், நீயா படத்தில் நான் கட்டில் மேலே கண்டேன் என்ற பாடலையும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடலையும் பாடி கமல் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் எஸ்.பி.பி. கடவுள் அமைத்து வைத்த மேடை இசைக்கும் கல்யாண மாலை என்று கமலுக்காக இவர் பாடிய பாடல் காலத்தால் அழியாத பாடலாகும்.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக சின்ன மணிக்குயிலே உள்ளிட்ட பல பாடல்களை பாடி அவரது ரசிகர்களையும் தனது இசை என்ற வட்டத்துக்குள்ளே கொண்டு வந்தவர் எஸ்.பி.பி. 1980-களில் பல வெற்றிப் படங்களை தந்தவர் மைக் மோகன். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் இளைய நிலா பொழிகிறதே என்ற ஒரு பாடல் வரும்.
அந்த பாடலில் தனது மென்மையான இசையை பொழிந்தவர் எஸ்.பி.பி. உதயகீதம் என்ற படத்தில் உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் என்று கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்.பி.பி.யின் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் உண்மையாகவே தனது குரல் மூலம் அழுதிருப்பார் எஸ்.பி.பி. அந்த பாடலை கேட்டு கண்கலங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். நடிகர் மைக் மோகனின் வெற்றிக்கு எஸ்.பி.பி.யின் பாடல்களே காரணம் என்று சொன்னாலும் அதில் தவறு இருக்க முடியாது.
சங்கீதத்தை முறையாக படிக்காதவர் எஸ்.பி.பி. ஆனால் பாரதிராஜாவின் காதல் ஓவியம் என்ற படத்தில் சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்ற பாடலை ஸ்ருதி பிசகாமல் உரத்த குரலில் பாடி ஜால வித்தைகளை காட்டியிருப்பார் எஸ்.பி.பி. நவரச நாயகன் கார்த்திக்கிற்காக நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று என்ற பாடலையும் நடிகர் பிரபுவுக்காக என்னவென்று சொல்வதம்மா, குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் போன்ற பாடல்களையும் பாடி இசை உலகில் கோலோச்சியவர் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, நடிகர் சிவகுமாருக்காக இவர் பாடிய பாடல்களும் உலகப் புகழ் பெற்றவை. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, காதல் விளையாட கட்டில் எது கண்ணே போன்ற பாடல்களும், நடிகர் முத்துராமனுக்காக சம்சாரம் என்பது வீணை, சந்தோஷம் என்பது ராகம் என்ற பாடலையும் பாடி ரசிகர்களின் இதயத்தில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார் எஸ்.பி.பி.
டி. ராஜேந்தரின் இசையில் வெளிவந்த படத்தில் இவர் பாடிய இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம் என்ற பாடல் ரசிகர்களின் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி, ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த படத்தில் காதல் ரோஜாவே என்று இவர் பாடிய பாடல் ரசிகர்களின் உள்ளத்தை இன்றும் நெருடக்கூடிய ஒரு அற்புதமான பாடல்.
அது மட்டுமா, இன்றைய நாயகர்கள் விஜய், அஜித் போன்றவர்களுக்கும் இவர் பாடத் தவறவில்லை. அஜித்துக்காக அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலையும், விஜய்க்காக சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் என்ற பாடலையும் பாடி அவர்களது ரசிகர்களையும் ஆட்கொண்டவர் எஸ்.பி.பி. எல்லாவற்றுக்கும் மேலாக கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் பாடி ரசிகர்களை கிறங்கடித்தவர் எஸ்.பி.பி. மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று ராதிகாவுக்காக மூச்சுவிடாமல் பாடியிருப்பார் எஸ்.பி.பி. அந்த பாடலை பாடிய எஸ்.பி.பி.யின் மூச்சு தற்போது நின்று போனது ரசிகர்களின் இதயத்தையும் நிறுத்தி விட்டது.
இப்படி 50 ஆண்டு காலம் இசை உலகில் கோலோச்சியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். மக்கள் திலகம் முதல் இன்றைய இளைய தளபதி வரை நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடிய பெருமை உண்டு என்றால் அது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தையே சாரும். அத்தோடு விட்டாரா, பக்தி பாடல்களிலும் இமயம் தொட்டவர் எஸ்.பி.பி. நமச்சிவாய, நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்று பக்தி ரசம் சொட்ட சொட்ட இவர் பாடிய பாடல் இன்றும் ஆலயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவர் மறைந்தாலும் அவரது பாடல் இசை இன்னும் பல நூற்றாண்டுகள் உலகம் முழுவதும் ஒலித்து அவரது திறமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்றால் அது மிகையாகாது.
உதயகீதம் படத்தில் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்று ஒரு பாடல் வரும். அந்த பாடலின் இடையில் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதே போல் இன்று அவர் மறைந்திருந்தாலும் என்றும் இசையாய் அவர் மலர்ந்திருப்பார் என்பதே உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025