பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொலை: பயங்கரவாத தாக்குதலுக்கு அதிபர் கண்டனம்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      உலகம்
Emmanuel 2020 10 17

Source: provided

பாரிஸ் : பிரான்சில் ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பள்ளி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது.

குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் அந்த ஆசிரியரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடினார். இதனால் அவர் சுட்டு கொல்லப்பட்டார்’ எனக் கூறினர்.

இது கோழைத்தனமான தாக்குதல் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை கற்றுக் கொடுத்தமைக்காக ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

ஆசிரியர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் கூறினார்.தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து