பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன செரீப் கிண்டல்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      உலகம்
Nawaz-Sharif 2020 10 17

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துவதாக நவாஸ் செரீப் கிண்டல் அடித்துள்ளார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிகிச்சைக்காக லண்டனுக்கு நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தி உள்ளது.முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பி.டி.எம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பி.பி.பி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் செரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் செரீப் அதில் பேசியதாவது:

ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமரவைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பும், ஐ.எஸ்.ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும்.

என்னை நீங்கள் துரோகி என்று குற்றம்சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன்.

இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். என்னையும், என் குடும்பத்தாரையும் துரோகிகள் என்று இம்ரான் தரப்பு அழைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. தகுதியில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

 

பாகிஸ்தானில் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து