சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (24.11.2020) தலைமைச் செயலகத்தில், கடந்த 14.11.2020 அன்று மதுரையில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது துணிக்கடை கட்டிடம் இடிந்து விழுந்து துரதிஷ்டவசமாக உயிரிழந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மதுரை மாநகர், மதுரை தெற்கு வட்டம், தல்லாகுளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் 14.11.2020 அன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்த போது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இரங்கலை தெரிவித்ததோடு, கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி, அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா 15 லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டார். அதன்படி, உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நேற்று தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இணை இயக்குநர் ப்ரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.