முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்திய முதல்வர் மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதா? ஸ்டாலின் மீது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்பலி இல்லாமல் தடுத்து ஒட்டுமொத்த மக்களை பாதுகாத்து, பாராட்டை பெற்ற முதல்வர் மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மதுரையில் மாநில அம்மா பேரவை சார்பில் கொரோனா நோய் தொற்றார்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உணவு கூடத்தை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 147 நாட்களைக் கடந்து உணவே மருந்தாக அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நிவர் புயல் தாக்குதலால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாவண்ணம் முதல்வர் புயலை காட்டிலும் அதி தீவிர போர்க்கால நடவடிக்கை எடுத்தார். 

கடந்த 21-ம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி 23-ம் தேதி தாழ்வு மண்டலமாகவும், அதே நாளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து 23-ம் தேதி முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதனை தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து 24 மணி நேரமும் புயல் குறித்து நிலவரம் கேட்டு அறிந்து உடனுக்குடன் எங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக 25-ம் தேதி தொடர் மழையால் தமிழகம் முழுவதும் 14,144 பாசன ஏரிகளில் 1,697 ஏரிகள் நிரம்பின. இதில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவு எட்டியது. இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரடியாக சென்று அதனை பார்வையிட்டு அதன் உபரி நீரை உடனடியாகவெளியேற்ற உத்தரவிட்டார். புயல் கரையை கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்கு கடந்த 26-ம் தேதி நேரடியாக சென்று வாழை தோப்புகளை பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாக துறைமுகப் பகுதி, மீனவர்கள் பகுதி அதே போல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடத்தில் மனுக்கள் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாது அங்கிருந்து முதியவர் ஒருவரிடம் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து தாய் நாட்டின் தலைமகன் என்பதை மீண்டும் நிரூபித்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.  அதே போல் துணை முதல்வரும் சென்னை வேளச்சேரி, தரமணி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதே போல் முதல்வரும், துணை முதல்வரும் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிப்புயடையும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கழகத்தின் சார்பில் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் அப்படி கழக நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.  இன்றைக்கு பல்வேறு ஊடங்கள் கூட முதல்வர் எடுத்த நடவடிக்கையால் உயிர் சேதமும் ஏற்படவில்லை அதேபோல் பொருள் சேதம் குறைவாக உள்ளது என்று பாராட்டியிருந்தனர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழகத்தின் நிலவரங்களை கேட்டறிந்து தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறி தமிழகத்தின் செயல்பாட்டினை பாராட்டினார். இதையெல்லாம் தெரிந்த ஸ்டாலின் இந்த நிவர் புயலிலும் கூட அரசியல் செய்ய நினைக்கிறார். கொளத்தூர், வில்லிவாக்கம் உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன் என்று ஸ்டாலின் பெருமையாக கூறி அரசை பற்றி குறை கூறுகிறார். 

ஆனால் இன்றைக்கு 15 மாவட்டங்களில் நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாக்கும் வண்ணம் 2,25,398 நபர்களை 3,042 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்கள் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாது மேலும் 850 நிரந்தர மருத்துவ முகாம்களும், 224 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் இதுவரை 73,000 மேற்பட்டோர் மருத்துவ முகாமில் பயன்பெற்றுள்ளனர். 

தமிழகம் முழுவதும் 4,133 தாழ்வானபகுதிகளை கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பெய்யும்போது மழை நீர் தேங்கிமழை விட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து விடக் கூடிய நிலையை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் எல்லாம் மழைநீர் சூழ்ந்ததால் அது வெளியேற்றவே ஏறத்தாழ ஆறு மணி நேரம் ஆகும் என்பது ஸ்டாலின் நன்றாக தெரியும். தொடர்ந்து முதல்வர் களநிலவரங்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டறிந்து உடனுக்குடன் உரிய வழிகாட்டுதலை வழங்கினார். 

அதுமட்டுமல்லாது கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் 100 சென்டிமீட்டர் மழை பெய்தது ஆனால் புரட்சித்தலைவி அம்மா தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அதனை ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கை எடுத்தார்.  கஜா புயல், தானே புயல்,ஓகி புயல் இதற்கெல்லாம் மேலாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் எல்லாம் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியது இன்றைக்கு அம்மாவின் வழியில் மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பல்வேறு மாநிலங்கள் பாராட்டி வருகின்றன.

குறிப்பாக இந்த நிவர் புயலிலும் முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதன் மூலம் இயற்கை கையாளுவதில் ஒரு புதிய இலக்கணத்தை முதல்வர் படைத்துள்ளார் என்று தமிழக மக்களே முதல்வரை பாராட்டுகின்றனர்.  

முதல்வரும், துணை முதல்வரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஆறுதல் கூறி வருகின்றனர். இதில் முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பாதிப்பு கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  ஆனால் ஸ்டாலின் அரசின் போர்க்கால நடவடிக்கைகளை தெரிந்து கொண்டே மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.  

புயல் கரையை கடக்கும் போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும், மின்னல் இடி தாங்கியோ எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை மேலும் தற்பொழுது முதல்வர் வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்ந்து இரவு பகல் பாராது பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவிலேயே இயல்பு நிலை திரும்பி உள்ளது ஆகவே மக்களைக் காப்பதில் அம்மா அரசுக்கு நிகர் எந்த அரசும் கிடையாது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பாரத பிரதமர் பாராட்டைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறியது போல் தற்போது கடும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களையும், அதிகப் பொருள் சேதங்கள் இல்லாமல் காப்பது எப்படி என்று அனைத்து மாநிலங்களும் வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து