புதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் ஆதி சங்கரா டிஜிட்டல் அகாடமியை’ காணொலி காட்சி மூலம் திரு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிகப் பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
கோவிட்-19 பெருந்தொற்று பள்ளிகளை மூட வைத்து கோடிக்கணக்கான மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றி விட்டது. கற்பித்தலையும், கற்றலையும் மாற்றுவதற்கான வாய்ப்பை தொழில்நுட்பம் வழங்குகிறது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், புதிய யுகத்தின் தேவைக்கேற்ப கல்வி முறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தொலைதூர பகுதிகளிக்கும் தரமான கல்வி, குறைந்த செலவில் கிடைக்க ஆன்லைன் கல்வி உதவுகிறது. இது தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கும் உதவியாக உள்ளது. கொவிட்-19 தொற்று கல்வி அமைப்பை மாற்றிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோவிட்-19 தொற்றுக்கு முன்பே கல்வியில் தொழில்நுட்பம் வேகம் எடுக்கத் தொடங்கியது.
உலகளாவிய கல்வி தொழில்நுட்பத் துறை கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து வருகிறது. இது கல்வி கற்பவர்களுக்கு மட்டும் அல்ல, கல்வி தொழில் முனைவோர்களுக்கும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இத்துறை வழங்கும் திறன்களை பெற்று, புதுமைகள் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்கள் இடையே நல்ல கலந்துரையாடலை ஏற்படுத்தலாம். ஆனால், அது வகுப்பறையில் கிடைக்கும் தொடர்புக்கு ஈடாகாது. ஆன்லைன் கல்வி, போதிய அளவு தீவிரமாக இல்லை என பெற்றோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் கல்விக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேக சிந்தனை, கற்பனை, புதுமையை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.