பெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அதுபோல் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவி ஏற்றார். எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து 16 மாதங்கள் ஆகிறது. ஆட்சி அமைந்த போது எடியூரப்பா மட்டும் பதவி ஏற்றார்.
அதன் பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு பிறகு 2-வது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த சுதாகர், பைரதி பசவராஜ் உள்பட 11 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. அதில் 6 இடங்கள் காலியாக இருந்தன.
சமீபத்தில் பாரதீய ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் சி.டி.ரவி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமைச்சரவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. அமைச்சரவையில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் 3-வது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் எம்.எல்.சி.க்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர், எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து வந்து இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத்திற்கு (தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார்) அமைச்சர் பதவி கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது. அமைச்சரவையில் இருந்து சரியாக செயல்படாத சிலரை நீக்கவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.