சிவகங்கை : மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அமிர்தம் என்ற மாணவி கூறுகையில், நான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். எனக்கு டாக்டராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால், என்னுடைய அப்பா, அம்மா கூலி வேலை செய்வதானால் அது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அரசுப் பள்ளியில் படிப்பதால், என்னால் மருத்துவப் படிப்பிற்கான இடம் வாங்க முடியுமா? என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், தமிழக முதல்வரின் இந்தத் திட்டத்தினால், இந்தியாவில் வேறு எங்குமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் 7.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டால் எத்தனையோ ஏழைக் குடும்ப மாணவர்களின் கனவு இங்கு நனவாகியுள்ளது. அதற்காக முதல்வருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு நல்ல ஒரு மருத்துவராக இந்தச் சமுதாயத்திற்கு சேவையாற்றுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்னநம்பி என்ற மாணவி கூறுகையில், என்னுடைய பெயர் சின்னநம்பி. சிவகங்கை மாவட்டத்தில் கணபதிபட்டி என்ற ஊரிலிருந்து வருகிறேன். நான் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் புழுதிப்பட்டி அரசுப் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். என்னுடைய அப்பா தினக்கூலியில் வேலை செய்பவர். நான் மருத்துவராக வேண்டுமென்று கனவு இருந்தது. அந்தக் கனவு நனவாகுமா என்று சந்தேகம் இருந்தது. நம்முடைய முதல்வர் கொண்டு வந்த 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மூலம் எங்களைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராகலாம் என்ற கனவு இன்று நனவாகியுள்ளது.அதற்கு நமது முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் கனவைத் தூண்டியுள்ளதென்று நான் நினைக்கிறேன். அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டாமென்று எண்ணக்கூடியவர்களும் அரசுப் பள்ளிகளில் சேரும் அளவிற்கு இந்தத் திட்டம் மிகவும் நல்ல திட்டமாக அமைந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறேன். இதற்கு தமிழக முதல்வருக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.