சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உழவுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் உள்ளதுதான் பொங்கல் திருநாள். தை மாதத்தின் பிறப்புதான் சங்கராந்தி பண்டிகை என்றும் தைத்திருநாள் என்றும் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகாலி பிஹு, உத்தராயண் மற்றும் பாஷ் பர்வா போன்ற பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த விழாக்கள் நம் சமுதாயத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் லோஹ்ரி, போகி வாழ்த்துக்கள். இந்த திருவிழாக்கள் அவற்றின் வண்ணமயமான தன்மைக்கு பெயர் பெற்றவை மற்றும் நல்ல அறுவடை மற்றும் இயற்கையின் அருளைக் குறிக்கின்றன. அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரட்டும்.
முன்னதாக போகி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த சிறப்பு நாள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.