முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 8,387 கனஅடி நீர் திறப்பு

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்துவந்தது.

ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியதால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவும் குறைய தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 5740 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 1995 கனஅடி, கடனா அணையில் இருந்து 512 கனஅடி, ராமநதியில் இருந்து 140 கனஅடி என மொத்தம் 8 ஆயிரத்து 387 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளில் நீர் திறப்பு குறைவால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி சென்ற வெள்ளம் சற்று குறைந்தது. முன்னதாக அதிகளவு திறக்கப்பட்ட நீரினால் ஆற்றின் இரு கரைகளையும் ஒட்டி அமைந்துள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த 6 நாட்களாக வயல்களிலும், வீடுகளையும் சூழ்ந்த வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் முக்கூடல், சேரன்மகாதேவி, கல்லூர், கொண்டாநகரம், சந்திப்பு மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கின. தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் வசித்தவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கின.

மணிமுத்தாறு அருவி அருகே அமைந்துள்ள பாலம் அதிகளவு நீர் திறப்பால் சேதமடைந்தது. நெல்லை டவுன் குறுக்குத்துறை கோவில், தைப்பூச மண்டபம், பாபநாசம் படித்துறை உள்ளிட்டவற்றையும் வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. தற்போது அவை மெல்ல மெல்ல தெரிய வருகிறது.

தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள 6 அணைகளில் கொடு முடியாறு அணையை தவிர பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு உள்ளிட்ட 5 அணைகள் நிரம்பிவிட்டன. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 38.75 அடி நீர் இருப்பு உள்ளது.

வெள்ளம் குறைந்தாலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேர் சேரன்மகாதேவியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர அம்பை, சேரன்மகாதேவி பகுதிகளில் தலா 20 மீட்புக்குழுவினரும், நெல் லையில் 30 மீட்புக்குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. முற்றிலும் துண்டிக்கப்பட்ட போக்குவரத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். நேற்று காலையில் சாலைகளில் வெள்ளம் குறைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல மாற தொடங்கி உள்ளது. இதனால் நேற்று அதிகாலை முதல் வழக்கம்போல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் அடவிநயினார் கோவில் அணையை தவிர மற்று அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. நேற்று காலை ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சுரண்டை, ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 6 நாட்களுக்கு பிறகு நேற்று மழை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை குறைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி, செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.

குற்றாலம் அருவிகளில் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று வரை குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து